search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தணிக்கை அறிக்கை"

    வேலூர்-திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2015-2016-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வேலூர்-திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2015-2016-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் 2003-2004-ம் கல்வி ஆண்டில் இருந்து கடந்த 13 ஆண்டுகளாக செலவு செய்யப்பட்ட ரூ.67.59 கோடிக்கான காரணங்கள் அறிக்கையில் தாக்கல் செய்யப்படவில்லை.

    மேலும் 574 காரணங்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ள ரூ.36.62 கோடிக்கு சரியான கணக்குகள் இல்லை. ஆக மொத்தம் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    உள்ளூர் நிதி தணிக்கை துறையின் மண்டல இணை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இதுகுறித்த அறிக்கையை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நிதி அதிகாரி (பொறுப்பு) வி.பருவழுதிக்கு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி அனுப்பினார்.

    அதில் தேர்வு பணிக்காக பல்கலைக்கழக அதிகாரிகள் ரூ.31.42 கோடி முன்பணமாக எடுத்துள்ளனர். அதுதவிர மற்ற பணிக்காக ரூ.40.31 கோடி பணம் பெற்றுள்ளனர். அதற்காக ரூ.4.15 கோடி மற்றும் ரூ.71.74 கோடிக்கு ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நிதிஅதிகாரி 2015-16-ம் ஆண்டில் ரூ.33.16 கோடி ஒதுக்கியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் துறை தலைவர்கள் அவற்றை முன்பணமாக பெற்றுள் ளனர்.

    ஆனால் ரூ.32.35 கோடி செலவு செய்ததற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை.

    ஆசிரியர்கள் அல்லாத 22 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால் 35 இடங்கள் கூடுதலாக அதாவது 57 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்காக பணிநியமன கோப்பு மற்றும் நிறைவேற்றப்பட்ட சிண்டிகேட் தீர்மானம் போன்றவை தணிக்கையின் போது சமர்ப்பிக்கப்படவில்லை.

    தணிக்கை அறிக்கையில் எழுப்பபட்ட மறுப்புகளுக்கு 2 மாதத்தில் பதில் அளிக்கும் படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல் கலைக்கழகம் சார்பில் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    உள்ளூர் தணிக்கை இன்ஸ்பெக்டர் கே.பிரேம்நாத் கடந்த ஆண்டு (2017) ஜூலை 10, ஜூலை 24 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இதுகுறித்து எழுதினார். அவற்றுக்கு 3 நாட்களில் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கும் பல்கலைக்கழகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.#tamilnews
    ×